சுதந்திரமாக செயற்பட முடியவில்லை : காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலக பதவியிலிருந்து விலகினார் சட்டத்தரணி சிராஸ்

207 0

காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்  அப்பதவியிலிருந்து  ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை அவர் நான்கு பிரதான காரணிகளை முன் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு, காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக எந்த நன்மை பயக்கும் விடயங்களையும் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், அவ்வலுவலகத்தில் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என குறிப்பிட்டே இந்த இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கடந்த 2021 டிசம்பர் 13 ஆம் திகதி சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் ( ஓ.எம்.பி) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

;இந் நிலையிலேயே சுமார் நான்கு மாத காலத்துக்குள்ளேயே அவர் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

காணாமல் போனோர்  தொடர்பிலான அலுவலகம்  சுதந்திரமாக செயற்படுவதற்கு  அரசாங்கம் போதுமான அனுசரணையை அளிக்கவில்லை என  ராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், ஒருங்கிணைந்த நிதியின் மூலம் போதுமான நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் அது செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்

;அத்துடன் காணாமல் போனோர்  தொடர்பிலான அலுவலகத்தின் மீது ; நீதி அமைச்சின்  தலையீடுகள் ஒப்புக்கொள்ளப்பட்டதன் பிரகாரம் அலுவலகத்துக்கு தேவையான உதவிகளை வழங்க வெளிவிவகார அமைச்சு தவறியமை, ; காணாமல் போனோர் அலுவலகத்தின்  நடவடிக்கைகளை செயற்திறனாக முன்னெடுப்பதை கட்டுப்படுத்தும் அந்த அலுவலகத்தின் தற்போதைய யாப்பு உள்ளிட்ட காரணிகளை தனது ராஜினாமாவுக்கான காரணிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் முன் வைத்துள்ளார்.

;இவ்வாறான பின்னணியில் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியினையும், நிவாரணத்தினையும் வழங்க முடியாது போயுள்ளதாகவும் அதனால் தான் ராஜினாமா செய்வதாகவும் குறித்த கடிதத்தில் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறிப்பிட்டுள்ளார்.