இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

198 0

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார்.

இவ்வாறு இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு இன்று (01.05.2022) கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரணக் கட்சி கிடையாது. ஆரம்பிக்கப்பட்ட அடையாளத்தை இன்னும் அக்கட்சி மறக்கவில்லை. தொழிலாளர்களை மையப்படுத்தியே அது பயணிக்கின்றது. சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா, ; இலங்கையர்களுக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார். ; குரல் அற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்துள்ளார்

1947 இல் நடைபெற்ற தேர்தலில் 8 மலையக பிரதிநிதிகள் நாடாளுமன்றம் சென்றனர். அதன்பின்னர் குடியுரிமை மற்றும் ஏனைய உரிமைகள் பறிக்கப்பட்டன. அவற்றை மீட்டெடுப்பதற்கு தொண்டமான் பாடுபட்டார். வெற்றியும் கண்டார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். அமரர் ஆறுமுகன் தொண்டமானும் மக்களுக்காகவே அரசியல் செய்துள்ளார். தனது மக்களின் நில உரிமைக்காக போராடியுள்ளார்.

பாரத  பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் முழு உலகமும் இந்தியாவை திருப்பி பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உலகில் 5ஆவது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது. ; ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் மோதல் ஏற்பட்டபோதுகூட, உக்ரைனில் வாழ்ந்த இந்தியர்களை சிறு காயமின்றி மீட்டெடுத்தார்.

இலங்கையை அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். ; மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி ; நிலை, நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும் என இறைவனை  பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார் என்றார்.