பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாத வகையில் ஸ்தீரமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதால் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் மகாசங்கத்தினருடனான பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வது அவசியமற்றது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறிய ஓமல்பே சோபித தேரர் , ஆளும் தரப்பினர் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைக்கும் மதிப்பளிப்பதில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ,மகாசங்கத்தினருக்குமிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் உள்ள இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக தீர்வு காணுமாறு மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளிடம் மாறுப்பட்ட கருத்து வேறுப்பாடு காணப்படுவதால் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் இழுபறி நிலைமை காணப்படுகிறது.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன. அதற்கமைய முதற்கட்டமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்து விரைவில் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்.
மகாசங்கத்தினருடனான பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் எவரும் கலந்துக்கொள்ளாமை கவலைக்குரியது. பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளுமாறு பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸிற்கு அழைப்பு விடுத்தோம்.
‘பிரதமர் பதவி தொடர்பில் ஸ்தீரமான தீர்மானத்தை எடுத்துள்ளேம். பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவே இடைக்கால அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வது அவசியமற்றது’ அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவிற்குள் எடுக்கும் தீர்மானத்திற்கு முன்னுரிமை வழங்காமல் மக்களின் அபிலாசைகளுக்கும் மதிப்பளித்து இப்பேச்சுவார்த்தையில் நடுநிலையான முறையில் கலந்துக்கொள்ளுமாறு பொதுஜன பெரமுனவின் தவிசாளரிடம் வலியுறுத்தினேன், இருப்பினும் பொதுஜன பெரமுன சார்பில் எவரும் கலந்துக்கொள்ளவில்லை. மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காமல் ஆளும் தரப்பினர் செயற்படுகின்றமையின் விளைவை வெகுவிரைவில் அனுபவிப்பார்கள்.