ஒரே தருணத்தில் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் : ரணில், சஜித், அநுர இணக்கம் – சுமந்திரன்

186 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும்ரூபவ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகவும் கொண்டுவரப்படவுள்ள இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் ஒரே தருணத்தில் முன்னகர்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் இணங்கியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வீரகேசரியிடத்தில் கருத்துவெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன் ஐக்கிய மக்கள் சக்தியானது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையை கொண்டுவரவுள்ளது. அதற்குரிய ஏற்பாடுகளை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று என்னால் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த இரண்டு பிரேரணைகளையும் ஒரே தருணத்தில் தனிநபர் பிரேரணைகளாக பாராளுமன்றத்தில் முன்னகர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முதற்படியாக, நான் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசரூபவ் ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களுடன் தனித்தனியான பேச்சுக்களை முன்னெடுத்தேன்.

அந்தப் பேச்சுக்களின் அடிப்படையில் அவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் ஒருமித்து முன்னெடுப்பதற்கு இணங்கியுள்ளனர். குறிப்பாக, காலிமுகத்திடத்தில் எழுச்சியாக போரடிவரும் போராட்டக்காரர்களும் நாடாளவிய ரீதியில் வீதிக்கு இறங்கியுள்ள பொதுமக்களும் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷ குடும்பத்தினரையும் அவர்களது அரசாங்கத்தினையும் வீட்டுக்குச் செல்லுமாறே வலியுறுத்துகின்றனர்.

ஆகவே அந்த வலியுறுத்தல்களுக்கு மேலும் அழுத்தங்களை அளிக்கும் வகையிலேயே இரண்டு பிரேரணைகளையும் ஒரே தருணத்தில் முன்னகர்த்துவதற்கு எதிர்க்கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை தனித்தனியாக முன்னெடுக்க முயற்சிக்கப்படும்போது ஏதேவொரு ராஜபக்ஷவை காப்பாற்றுவதற்கு முயல்கின்றோம் என்ற தோற்றப்பாடும் விஷமத்தனமாக பரப்பப்படுகின்றது. ஆகவே மக்களை குழப்பும் இவ்விதமான பிரசாரங்களுக்கு குறித்த இரு பிரேரணைகள் இரண்டையும் ஒன்றாக முன்னெடுப்பதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.