சமூக ஊடக செயற்பாட்டாளரும் ‘#GoHomeGota2022’ எனும் முகப்புத்தக பக்கத்தின் நிர்வாகியுமான திசர அனுரத்த பண்டாரவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
அண்மையில் மிரிஹானையில் ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகே இடம்பெற்ற பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஏப்ரல் ; 2 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் அரசு தொடர்பில் பொது மக்களிடையே ; விரோதத்தை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டதாக கூறி திசர அனுரத்த பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.
தண்டனை சட்டக் கோவையின் 120 ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த பிணை நிபந்தனைகளில் ஒன்றாக அவரது வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டது.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா முன்னிலையில் மீள விசாரணைக்கு வந்தது. இதன்போது அனுரத்த பண்டாரவுக்காக ஆஜரான சட்டத்தரணியின் கோரிக்கையை பரிசீலித்து, நீதிவான் வெளிநாட்டு பயணத் தடையை நீக்கினார்.
இது குறித்த வழக்கு ; மீள மே 31 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.