கல்வி அமைச்சின் செயலாளர் முன்வைத்துள்ள யோசனை

182 0

எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனையாகும்.

எனினும், அதனை நடைமுறைப்படுத்துவதாயின், தீர்க்கமானதொரு வேலைத்திட்டத்தை முன்‍னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்தை மாற்றித் தருமாறு அதிபர் மற்றும் ஆசிரியர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை உண்மையில் சிறந்ததொரு யோசனையாகும்.

எவ்வாறிருப்பினும், அதிபர், ஆசிரியர்களுக்கு மாத்திரம் அதனை செயற்படுத்த முடியாது. மாணவர்களும் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

எனவே, இது இலகுவாக நடைமுறைப்படுத்தப்படக்கூடிய விடயமல்ல. காரணம், நாட்டில் சுமார் 45 இலட்சம் மாணவர்களும், 2 இலட்சத்து 45,000 ஆசிரியர்களும் உள்ளனர்.

vஇவர்கள் எல்லோருக்கும் சமமான வகையில் இதுகுறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை.

நாட்டில் 10 ஆயிரத்து 155 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் இரு பாடசாலைகளில் ஒரு மாணவர் மாத்திரம் உள்ளார். அது மாத்திரமின்றி, 50க்கு குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் 100, 200, 500, 1000 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் என பல பாடசாலைகள் உள்ளன.

இந்த வகைப்படுத்தல்களின் அடிப்படையிலேயே மேற்கூறிய விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே தான் அது இலகுவான விடயமல்ல என்று கருதுகின்றோம் என்றார்.