பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி விவாதம் நடத்த வேண்டும் – எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல்

290 0

ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினார்கள்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இதையொட்டி, இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புழக்கத்தில் இருந்த உயர்மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் யாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று நடைபெறும் பாராளுமன்ற முதல் நாள் கூட்டத்தையும், நாளை பட்ஜெட் கூட்டத்தையும் புறக்கணிக்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் முடிவு செய்து உள்ளனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.