நடுக்குப்பம் மக்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவி

285 0

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜனவரி 17-ம் தேதி முதல் ஒரு வாரம் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, கடந்த ஜனவரி 23-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முற்பட்ட போது வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையில் மெரீனாவை ஒட்டியுள்ள திருவல்லிக்கேணி, நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய கடுமையான தாக்குதல்களில் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, ஜல்லிக்கட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், “ஜல்லிக்கட்டு வன்முறையில், சமூக விரோதிகளை மட்டும் தனியாக அடையாளம் கண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்பாவி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சியினரும், மாணவர் அமைப்புகளும் தொடர்ச்சியாக சென்று பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.