ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

278 0

அமெரிக்காவில் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 27ஆம் திகதி அதிரடியாக நிர்வாக ரீதியாக சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி சிரியா அகதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சூடான், ஏமன், சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் கைதான 2 ஈராக்கியர்கள் சார்பில் நியூயார்க் மாவட்ட கோர்ட்டில் அமெரிக்க சிவில் உரிமை யூனியன் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆன் டோனெலி, ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தார்.

இதற்கிடையே இந்த தடை உத்தரவு முஸ்லிம்களுக்கு எதிரானது என்று அமெரிக்க ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால் அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களின் விமான நிலையங்களில் டிரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடந்து வருகின்றன.