ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

269 0

அமெரிக்காவில் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.

அமெரிக்காவில் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 27-ந் தேதி அதிரடியாக நிர்வாக ரீதியாக சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி சிரியா அகதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சூடான், ஏமன், சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் கைதான 2 ஈராக்கியர்கள் சார்பில் நியூயார்க் மாவட்ட கோர்ட்டில் அமெரிக்க சிவில் உரிமை யூனியன் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆன் டோனெலி, ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தார்.

இதற்கிடையே இந்த தடை உத்தரவு முஸ்லிம்களுக்கு எதிரானது என்று அமெரிக்க ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால் அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களின் விமான நிலையங்களில் டிரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடந்து வருகின்றன.

நேற்று முன்தினம் 2-வது நாளாக நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன் நகர விமான நிலையங்களில் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க் நகரில் 10 ஆயிரம் பேர் அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

இதேபோல் வாஷிங்டன் நகரில் உள்ள லபயெட்டே சதுக் கத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அகதிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். பாஸ்டன், லாஸ்ஏஞ்சல்ஸ், ஹூஸ்டன் விமான நிலையங்களிலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு டிரம்புக்கு எதிராகவும், அகதிகளுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டிரம்புக்கு எதிரான போராட்டம் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் தனது உத்தரவு குறித்து ஜனாதிபதி டிரம்ப் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒரு விஷயத்தை தெள்ளத்தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். இந்த தடை நிச்சயமாக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. ஊடகங்கள்தான் முஸ்லிம்களுக்கு எதிரான தடை என்று தவறாக தெரிவித்து உள்ளன. இது ஒரு மதம் சார்ந்த பிரச்சினை கிடையாது.

இது பயங்கரவாதத்துக்கு எதிராகவும், அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்காகவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆகும். உலகில் 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் யாரும் அமெரிக்க அரசின் உத்தரவால் பாதிக்கப்படவில்லை.

எங்களது நாட்டில் பாதுகாப்பு கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன என்பதை அடுத்த 90 நாட்களில் ஆய்வு நடத்தி அதை உறுதி செய்து கொண்ட பிறகு எங்களுடைய நிர்வாகம் மீண்டும் விசாக்களை வழங்கும்.

சிரியாவில் மனிதகுலத்துக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி குறித்து கவலை கொள்கிறோம். அதே நேரம், நாட்டு மக்களை பாதுகாத்து அவர்களுக்கு சேவை செய்யவேண்டியதுதான் எங்களது அரசின் முதல் கடமை ஆகும். அதே நேரம் அரசின் உத்தரவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு உதவுவதற்கான வழிமுறைகளையும் காண்போம்.

எங்களது நாட்டில் குடியேறி இருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து அமெரிக்கா பெருமைகொள்கிறது. அதே நேரம் நெருக்கடியால் வெளியேறியவர்களுக்கு (அகதிகள்) அமெரிக்கா தொடர்ந்து கருணை காட்டும். என்றபோதிலும் எங்களது குடிமக்களையும் எல்லைகளில் வசிப்போரையும் பாதுகாக்க நாங்கள் இதுபோல் செய்துதான் ஆகவேண்டும்.

ஏற்கனவே ஒபாமா அரசாங்கம் குறிப்பிட்ட நாடுகளின் பயங்கரவாதத்தால் அமெரிக்காவுக்கு ஆபத்து உருவாகலாம் என்று 7 நாடுகளை அடையாளம் கண்டு அதை பட்டியல்படுத்தி உள்ளது. அந்த 7 நாடுகளுக்குத்தான் இந்த தடையை பிறப்பித்து இருக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.