ராஜிவ் கொலைக்கு முன்னரே அறிக்கை

257 0

கடந்த 1991ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னதாகவே, சி.ஐ.ஏ. என அழைக்கப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவினால் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டால் அல்லது அவர் அரசியலில் இருந்து திடீர் என அகற்றப்பட்டால் அதனால் இந்தியாவில் ஏற்படும் விளைவுகள் குறித்து அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

23 பக்கங்களைக் கொண்டு சொல்லப்பட்ட அறிக்கை கடந்த 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரேஷ்ட சி.ஐ.ஏ. அதிகாரிகளின் கருத்தை பெறும் நோக்கில் அவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘1989 ஜனவரி மாதம், தமது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன’ என்ற வாக்கியத்துடனேயே அந்த அறிக்கை ஆரம்பமாகிறது.

இருப்பினும், ஐந்து வருடங்களுக்கு பின்னர், அவர் பிரதமர் பதவி வகிக்காத நிலையில், 1991 மே மாதம் 21ஆம் திகதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரம்பதூரில் கொலை செய்யப்பட்டார்.

திடீர் என அரசியல் மாற்றத்துடன் ராஜீவ் காந்தி மரணிக்கும் பட்சத்தில் இந்தியாவுடனான அமெரிக்க, சோவியத் ரஷ்ய மற்றும் பிராந்திய நாடுகளுடனான ராஜதந்திர உறவுகளில் பெரும் தாக்கம் ஏற்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீக்கிய அல்லது காஷ்மீர் முஸ்லீம் ஒருவரின் தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி பலியாகும் பட்சத்தில் வட இந்தியாவில் பாரிய வகுப்பு கலவரம் ஏற்படும்.

அப்படியான கலவரம் ஒன்றினை அடக்க இராணுவ மற்றும் விசேட படைப்பிரிவினை இந்திய ஜனாதிபதி ஈடுபடுத்த வேண்டிவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, ராஜீவ் காந்தியின் மறைவிற்கு பின்னர், பீ.வி. நரசிம்மராவ் அல்லது வி.பீ. சிங் பிரதமர் பதவியினை ஏற்க வேண்டி வரும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல, ராஜீவ் காந்தி மறைந்ததன் பின்னர் பீ.வி. நரசிம்மராவ் பிரதமர் பதவியினை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் பல பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை தமிழர் தொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.

அமெரிக்க தகவல் சுதந்திர கட்டளைச் சட்டத்தின் கீழ் அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவினால் வெளியிடப்பட்ட 23 பக்க அறிக்கையில் பல பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.