எல்லை மீள் நிர்ணய அறிக்கை விரைவில் வர்த்தமானியில் – உயர் நீதிமன்றத்தில் அறிவிப்பு

279 0
எல்லை மீள் நிர்ணய அறிக்கையை ஒரு மாத காலப்பகுதியினுள் வர்த்தமானி மூலம் பிரசுரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா சார்பில் உயர் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி இன்று இதனை அறிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தலை உடனடியாக நடத்துமாறு பெப்ரல் அமைப்பு உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.

அந்த மனு இன்று மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் ஆகியோர், இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் சந்திப்பை நடத்தினர்.

இதன்போது எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் அது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல்களின் பின்னர் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஃபைசர் முஸ்தபா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரம் அளவில் புதிய எல்லை மீளமைப்பு குறித்த வர்த்தமானி வெளியாக்கப்படும் என்று கூறினார்.