வுவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் விசேட கூட்டம்

265 0

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் விசேட கூட்டமொன்று வுவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ‘அமைதியகத்தில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் இந்தக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை இக் கூட்டத்திற்கு செய்திகள் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை தங்கள் உறவுகளை விடுதலை செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன எதிர்வரும் 9ஆம் திகதி அலரிமாளிகையில் உயர்மட்ட சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தி தருவதாக எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கியதையடுத்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டதுடன், மண்டபத்தின் வாயில் பூட்டப்பட்டு இரகசியமான கலந்துரையாடல் ஒன்றே இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியும், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சார்பில் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.