வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தடை இன்று முழு இலங்கைக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வதா? மரணிப்பதா? என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, குடிப்பதற்கான குடிநீரையும் வரிசையில் நின்று பெற வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒன்றும் செய்ய முடியாத பதவிகளும் பட்டங்களும் தேவையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
அவர் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
”இலங்கைத் தீவில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மையினர் பொருளாதாரத் தடைக்கு உட்படுத்தப்பட்டு, அகதிகளாக்கப்பட்டு, இடம் பெயர்ந்து உள் நாட்டுக்குள்ளேயே அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ பொருட்கள் உட்பட மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று கையேந்திய நிலை கடந்த காலத்தில் இலங்கை அரசால் தமிழர்களுக்கு ஏற்பட்டது.
தமிழர்கள் மட்டும் அகதிகளாக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை அரசு ஏற்படுத்தி இன்று நாடு பூராகவும் மூவின மக்களையும் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வரிசையில் நின்று கையேந்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
நாட்டிலுள்ள மூவின மக்களும் அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களையும் வரிசையில் நின்று மணித்தியாலக் கணக்கிலும், நாள் கணக்கிலும், வாரக்கணக்கிலும் மண்ணெண்ணெய், பெட்ரோல், எரிவாயு தொடக்கம் உணவுப் பொருட்கள் வரை பெறுவதற்குச் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இனிவரும் காலங்களில் உணவு பொதிகளுக்குக் கூட வரிசையில் நிற்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. அரிசி வாங்க மூடைகளில் பணத்தைக்கட்டிக் கொண்டு செல்ல வேண்டியநிலைக்குப் பணவீக்கம் ஏற்படப் போகின்றது.
இந்தச் சூழலில் மக்கள் பிரதிநிதிகள் இம்மக்களின் துயர்களைத் துடைப்பதற்கு எந்தத் திட்டங்களையும் முன் வைக்காமல் பார்வையாளர்களாக இருந்து கொண்டு இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களையும் பசி பட்டினியில் வாழ்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
மக்கள் துன்பப்படும் போது மக்களின் துன்பங்களை, துயரங்களைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசை மக்கள் நிராகரிக்கின்ற இவ்வேளையில் ஒன்றும் செய்ய முடியாத பதவிகளும்.பட்டங்களும் தேவையா? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.