ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அடித்து விரட்டும் மனநிலையில் நாட்டு மக்கள் – தயாசிறி

176 0

ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அடித்து விரட்டும் மனநிலையில் நாட்டு மக்கள் உள்ள போது ஜனாதிபதி முறைமையை நீக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்றது.

உத்தேச அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் வரைபினை அவசர பிரேரணையாக கருதி அமைச்சரவையின் அங்கீகாரத்தை  பெற்றுக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சபையில் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணை தொடர்பில் வெள்ளிக்கிழமை (22) பாராளுமன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை. நிலையற்ற அரசாங்கமே நடைமுறையில் உள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தொடர்பிலான தனிநபர் பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பல்வேறு காலக்கட்டங்களில் அரசியலமைப்பு திருத்தம் ஊடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி முறைமையில் அதிகாரம் குறைக்கப்பட்டது. பின்னர் 18 ஆவது திருத்தத்தில் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது.

பின்னர் 19ஆவது திருத்தத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டு அது நிறைவேற்றுத்துறைக்கும், சட்டவாக்கத்துறைக்கும் இடையில் அதிகார ரீதியிலான முரண்பாட்டை தோற்றுவித்தது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தமம்  தற்போது மாறுப்பட்ட பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதுடன் இருந்ததை விட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் மேலும் அதிகரித்துக்கொள்ளப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்வைத்துள்ள பிரேரணை குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் தேர்தல் முறைமை, மாகாண சபை தேர்தல் முறைமை ஆகிய இரு பிரதான விடயங்கள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி முறைமையை நீக்கினால் மாகாண சபை தேர்தல் முறைமையையும் இரத்து செய்ய நேரிடும் அவ்வாறாயின் பிளவுப்படுத்தப்பட்ட நாடு தோற்றம் பெறுவதற்கும், நிலையற்ற அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கும் வாய்ப்புண்டு.

அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்வது குறித்து  மிகவும் நுணுக்கமான முறையில் ஆராய வேண்டும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.மக்கள் வாக்கெடுப்பினை தற்போதைய ஜனாதிபதியே அறிவிக்க வேண்டும்.

மக்கள் வாக்கெடுப்பை ஜனாதிபதி நடத்தாவிடின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய முடியாது. தற்போதைய நிலையில் மக்கள் வாக்கெடுப்பினை நடத்தவும் முடியாது. வாக்கெடுப்பும் வேண்டாம், 225 உறுப்பினர்களும் வீட்டுக்கு செல்லுங்கள் என அடித்து விரட்டும் நிலையில் மக்கள் உள்ளார்கள்

போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் முதல் கோரிக்கை கோ ஹோம் கோத்தா, இரண்டாவது  கோ ஹோம் ராஜபக்ஷர்கள், மூன்றாவது  கோ ஹோம் 225 உறுப்பினர்கள் என்பது தற்போது வியாபித்துள்ளது. இவ்வாறான நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தற்போது ஏற்புடையதாக அமையாது.

நடப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்ததை தனி நபர் பிரேரணையாக  ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றில் முன்வைத்துள்ளார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை திருத்தங்களுடன் கொண்டு வருவது குறித்து 21ஆவது திருத்தத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் விரைவுப்படுத்துவது அவசியமானது. அரசாங்கம் இப்பிரேரணையை அவசர யோசனையாக கருதி ; ஏனைய தரப்பினரது யோசனைகளையும் உள்ளிடக்கி அமைச்சரவையில் அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

19 ஆவது திருத்தத்தை செயற்படுத்துமாறு பொது மக்களும், மகாசங்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் என்றார்.