பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார பயணப் பாதை வேலைத்திட்டம் நிதியமைச்சர் நாடு திரும்பியதும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன உறுதியளித்தார்.
அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
அரசாங்கம் நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, மற்றும் அரசாங்கத்தின் நட்பு நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
தற்போது நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானதாக அமைந்துள்ளன. வீழ்ச்சி அடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பான உறுதிமொழிகள் அந்நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன.
தற்போதைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான சிறந்த பொறிமுறை யொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பொருளாதார பயணப்பாதை திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் நாடு திரும்பியதும் பாராளுமன்றத்திற்கு அவரால் தெளிவு படுத்தப்படும்
நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை எதிர்க் கட்சி தெரிவித்து வருகின்றது. எனினும் அவர்களது காலத்திலேயே தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொண்ட 80 ஆயிரம் பேர் தொழில் இருந்து நிறுத்தப்பட்டனர். இரண்டு ரூபா 80 சதம் அதிகரிப்பை கோரியே அந்த தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டனர் என்றார் ,