ஆயர் இராயப்பு ஜோசப் எதிர்வு கூறியது போன்றே ஜனாதிபதி சிங்கள மக்களால் அவமதிப்பு – செல்வம்

323 0

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு ஜோசப்பை அப்போது பாதுகாப்பு செயலராக இருந்த கோட்;டாபய ராஜபக்ஷ அவமதித்தார்.

இதன் போது ஆயர் கூறிய தீர்க்கதரிசனம் இன்று நடந்து கொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

மன்னார் முள்ளிக்குளம் பிரச்சினை தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த  கோட்டாபாய ராஜபக்ஷ்வை, மன்னார் மாவட்ட ஆயராக இருந்த  இராயப்பு ஜோசப்பும் நானும் சந்திக்க சென்றோம். சந்திப்பிற்கான நேரம் பிற்பகல் 3 மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதும் இரவு 7 மணிக்கே ;கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

நீண்ட நேரமாக  நாம் காக்க வைக்கப்பட்ட நிலையில் சந்திப்பு இடம்பெற்றபோது பாதுகாப்பு  செயலாளரான  கோத்தபாய  ராஜபக்ஷ், இராயப்பு ஜோசப் ஆண்டகையை கருத்திற்கொள்ளாமல் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

இதன்போது எனது மக்களின் பிரச்சினைகளை பேச வந்த போது நீங்கள் அதனை கருத்திற்கொள்ளவில்லை. நான் உயிருடன் இருந்தாலும் இல்லையென்றாலும் நிச்சயமாக ஒரு காலகட்டத்தில் சிங்கள மக்கள் உங்களை தூஷிப்பார்கள் என்று கோட்டாபய ராஜபக்சவிடம் இராயப்பு ஜோசப் ஆண்டகை நேரில் கூறினார்.

அன்று இராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியது இன்று உண்மையாகியிருக்கிறது. அதே பாதுகாப்பு செயலாளரான தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று அவரின் சிங்கள மக்களே தூஷிக்கின்றார்கள். ஜனாதிபதி பதவியை விட்டு செல்லுமாறு கூறுகின்றார்கள். ராஜபக்ஷ் குடும்பத்திற்கு எதிராக வீதி வீதியாக மக்கள் போராடுகின்றார்கள் என்றார்.