குறைகளை கேட்க மக்களைத் தேடி வரும் விஜய் வசந்த் எம்.பி.

226 0

மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக தெரியப்படுத்தும்படி விஜய் வசந்த் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிவதற்காக நாளை அகஸ்தீஸ்வரம் வருகிறார்.
இதுதொடர்பாக விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
உங்கள் பகுதியில் உங்கள் குறைகளை கேட்க உங்களை தேடி வருகிறேன். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவும் மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் பல்வேறு கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து நிறைவேற்றி வருகிறேன். பாராளுமன்றத்திலும் பேச வாய்ப்பு கிடைத்த  போதெல்லாம் கன்னியாகுமரி தொகுதியின் மேன்மைக்காக குரல் கொடுத்து வருகிறேன்.
தற்பொழுது நாடாளுமன்ற தொகுதியின் அனைத்து மக்களையும் நேரடியாகச் சென்று அவர்கள் குறைகளை கேட்க முடிவு செய்துள்ளேன்.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் மக்கள் குறை கேட்கும் முகாம்கள்  நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன் முதற்கட்டமாக நாளை காலை 8 மணி முதல் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள, எனது தந்தையாரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் எச்.வசந்தகுமார் அவர்கள் மணி மண்டபத்தில் வைத்து அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட அகஸ்தீஸ்வரம், தென்தாமரைகுளம், கன்னியாகுமரி, கொட்டாரம் பேரூராட்சிகள் மற்றும் கோவளம், குலசேகரபுரம், கரும்பாட்டூர், லீபுரம், மகாராஜபுரம், பஞ்சலிங்கபுரம், சாமிதோப்பு, வடக்கு தாமரைகுளம் ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்களிடம் குறைகள் கேட்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை அத்தினத்தில் இந்த முகாமிற்கு வந்து நேரடியாக தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த பகுதிகளை சேர்ந்த ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி மன்றதலைவர்களும் உறுப்பினர்களும் இதில் பங்கு பெற்று ஒத்துழைக்க கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு நான் உங்களுக்காகவே நான் என்ற மந்திரத்திற்கு ஏற்ப மேலும் மக்களுக்கு சேவை செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.