2013-ல் நடந்த மோதல் சம்பவ வழக்கு தொடர்பாக பா.ம.க. நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து வன்னியர் சங்க நிர்வாகிகளும், பா.ம.க. நிர்வாகிகளும் மகாபலிபுரத்துக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் திரண்டு வந்தனர்.
இதேபோல அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த வன்னியர் சங்க நிர்வாகிகளும், பா.ம.க. நிர்வாகிகளும் வேன்கள் மூலம் மகாபலிபுரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர்.
அப்போது மரக்காணம் அருகே மாநாட்டுக்கு சென்ற பா.ம.க. நிர்வாகிகளுக்கும், கட்டையன் தெரு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 10-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் எரிந்து சாம்பலாகின. இந்த மோதலில் பா.ம.க.வை சேர்ந்த அரியலூர் செல்வராஜ், கும்பகோணம் வினோத்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த மோதல் தொடர்பாக சுமார் 200 பேர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் இவர்களில் முக்கிய குற்றவாளிகள் என கருதப்பட்ட 34 பேர் மீது திண்டிவனம் முதன்மை அமர்வு நீதிமன்றம் எண்:2-ல் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி சுதா இந்த வழக்கை விசாரித்து வந்தார். இன்று இந்த வழக்கில் நீதிபதி சுதா இறுதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் நீக்கப்பட்டு 20 பேர் மீது நடத்தப்பட்டு வந்த வழக்கில் அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்கிறேன் என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.