மணலி 21-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ராஜேஷ்சேகர், செல்போனில் ரேணுகாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை.
சென்னை மணலி ஈ.வே.ரா. பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா (வயது 47). இவர், மணலி மண்டலத்தில் துப்புரவு பணியில் மேற்பார்வையாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். இவர், மதுரையை சேர்ந்த ரேணுகா (42) என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ரேணுகா தனது வீட்டில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்
ரமேஷ் கண்ணாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ரேணுகா, தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி, சோபாவில் அமர்ந்து கொண்டு வீட்டில் உள்ள 3 சமையல் கியாஸ் சிலிண்டர்களை அருகில் எடுத்து வைத்து அதன் வால்வை திறந்து வைத்து, தான் தீ வைத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மணலி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு மணலி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் 2 தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின்சார துறை மூலம் மின்சாரத்தை துண்டித்தனர். விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் நிறுத்தி வைத்தனர்.
மணலி 21-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ராஜேஷ்சேகர், செல்போனில் ரேணுகாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை.
ரேணுகாவின் தாய் அமராவதி, தந்தை கந்தசாமி மற்றும் பெண் தோழிகள், உறவினர்கள் அவருடன் பேச முற்பட்டபோது, யாராவது வீட்டுக்குள் வந்தால் தீ வைத்து விடுவேன் என்றும், தனது கணவரையும், அவருடன் தொடர்பில் இருக்கும் பெண்ணையும் தன் முன் கொண்டுவந்து நிறுத்துங்கள். இல்லை என்றால் கியாஸ் சிலிண்டரை வெடிக்க செய்வேன் என்றும் கூறியபடி கியாஸ் சிலிண்டர் வால்வை திறந்து வைத்து மிரட்டினார். இதனால் அந்த பகுதியில் கியாஸ் வாடை வீசியது.
இதனால் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணிவரை அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் வீட்டின் வெளியே காத்திருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆவேசத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்பட்டனர்.
இந்த நிலையில் இரவு 8 மணியளவில் மாவட்ட உதவி அலுவலர் மாரியப்பன், மாவட்ட அதிகாரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தீயணைப்பு படை வீரர்கள் வீட்டின் கதவை அதிரடியாக உடைத்தனர். கதவை உடைக்கப்படும் சத்தம் கேட்டதும் கியாஸ் சிலிண்டரை ரேணுகா வேகமாக திறந்தார்.
அதே வேளையில் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து அந்த வழியாக ரேணுகா மீது தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதற்கிடையில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு படை வீரர்களும் ரேணுகா மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இதனால் நிலைகுலைந்த ரேணுகா மயங்கி விழுந்தார். உடனே உள்ளே சென்ற தீயணைப்பு படையினர் கியாஸ் சிலிண்டர் வால்வை அடைத்தனர். பின்னர் மயங்கி கிடந்த ரேணுகாவை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து 8 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.