இருவேறு முக்கிய சம்பவங்களை கண்டித்து பிரேரணை நிறைவேற்றம்

245 0

கரைச்சி பிரதேச சபை அமர்வில் யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தாக்கப்பட்டமை மற்றும் றம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஆகியவற்றை கண்டித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த அமர்வில் றம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் எந்த இன மக்களிற்கும் இடம்பெறக்கூடாது என்பது தொடர்பான பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதன்போது, அண்மையில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்ட தாய்மாருக்கு ஆதரவாக கண்டன பிரேரணை நிறைவேற்றாது, குறித்த விடயம் தொடர்பில் பிரேரணை சமர்ப்பிப்பது பொருத்தமற்றது என சபையில் பிரதேச சபை உறுப்பினர் ரஜனிகாந் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த தவிசாளர் வேழமாலிகிதன் குறிப்பிடுகையில், பிரேரணைகளை எந்த உறுப்பினரும் கொண்டுவர முடியும். அதை தவிசாளர் கொண்டு வர வேண்டியதில்லை. இன்று ஒரு உறுப்பினர் சிங்கள மகன் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை கண்டித்து பிரேரணை சமர்ப்பித்தார்.

நீங்களும் உறுப்பினர் என்ற வகையில் அச்சம்பவம் தொடர்பில் பிரேரணை சமர்ப்பித்திருக்க முடியும். ஆனால் அதை நீங்களும் செய்யவில்லை. வேறு எந்த உறுப்பினரும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் தொடர்ந்து இடம்பெற்று பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக தவிசாளர் அறிவித்த போது, யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாக்கப்பட்டமை தொடர்பில் கண்டித்து பிரேரணை சமர்ப்பிபதாக ரஜனிகாந் குறிப்பிட்டார்.

அப்பிரேரணையை தவிசாளர் சபையில் சமர்ப்பித்து விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் எந்த பகுதியிலும் மக்கள் போராட்டங்களிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும், மக்களை தாக்குவது, சுட்டு கொலை செய்வது போன்றதான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டது.

அனைத்து இன மதத்தை சேர்ந்தவர்களையும் அரசு ஒரே பார்வையில் பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. விவாதிக்கப்பட்ட குறித்த இரண்டு பிரேரணைகளும் கண்டனங்களுடன் ஏகமனதாக ஒருமித்து நிறைவேற்றப்பட்டது.

Gallery Gallery Gallery Gallery