விடுதலைப்புலிகளின் புதையலை தேடி அகழ்வு

192 0

முல்லைத்தீவு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசாரின் தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடமொன்றில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகழ்வு நடவடிக்கை நேற்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குரவில் பகுதியில் குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் வசித்து வரும் நிலையில் போருக்கு முன்னர் காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது வேறு ஒரு நபரினால் குறித்த காணி பராமரிக்கப்பட்டு வருகிறது.

குறித்த காணியில் அகழ்வு நடவடிக்கைக்கான அனுமதியினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கியுள்ளார்.

கிராம அலுவலகர், மருத்துவ பிரிவினர், பொலிசார், படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணியில் மூன்று வேறு இடங்களில் அகழ்வு முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வு பணியினை மாலை 4.30 மணியவில் முடிவிற்கு கொண்டு வந்துள்ளார்கள்.