மங்களவின் பிறந்த தினத்தில் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் சத்தியாக்கிரகம்

109 0

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கருகில் (தாமரை தடாக வளாகத்தில்) அனைத்து சிரேஷ்ட மற்றும் மூத்த அரசியல்வாதிகளின் பங்கேற்புடன் சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டது.

வியாழக்கிழமை (21) மாலை 5 மணி முதல் 7 மணி வரை இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியமை இதன் கருப்பொருளாகக் காணப்பட்டது

இதன் போது ‘எதிர்பார்ப்பின் இணக்கப்பாடு’ என்ற வசனம் எழுதப்பட்ட பதாதையில் கையெழுத்து பெறும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.