சாரா உயிருடன் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – முஜிபுர்

190 0

சஹ்ரானுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட இருவரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. ஆனால் சஹ்ரானை வீதியில் கண்டவர்கள் , தேநீர் அருந்தியவர்கள் இன்றும் சிறையில் உள்ளார்கள்.

சாரா உயிருடன் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரை சர்வதேச பொலிஸ் ஊடாக கைது செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சபையில் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் மூன்றாண்டு நிறைவு குறித்து பாரளுமன்றில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  சம்பவத்தின் பின்னரான காலப்பகுதி சாதாரன மக்களின் வாழ்க்கைக்கும்,தேசிய நல்லிணக்கத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை குண்டுத்தாரிகளின் குழுவில் பிரதான நபருடன் தலைவருடன் சாரா ஜெஸ்மின் என்பவர் இருந்துள்ளார். சாரா இந்தியாவிற்கு தப்பித்துச் சென்றுள்ளார் என களுவாஞ்சிக்குடி முன்னாள் ஓ.ஐ.சி.அபூபக்கர் என்பவர் குறிப்பிட்டுள்ளார். இவர் இன்றும் தடுப்புக்காவலில் உள்ளார்.

சாரா மரணிக்கவில்லை, இந்தியாவில் உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.காத்தான்குடி தற்கொலைதாரிகளின் உடற்கூறு பரிசோதனைகளில் சாராவினதும் ,சாராவின் தாயாரினதும் டி.என்.ஏ ஒத்துப்போகவில்லை என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடப்படுள்ளது.

சாராவை சர்வதேச பொலிஸ் ஊடாக கைது செய்ய அரசாங்கம் இதுவரை பிடியாணையை பெற்றுக்கொள்ளவில்லை. குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் அப்போது பிறர்தரப்பினர் மீது பொறுப்பாக்கி அதிகாரத்தை கைப்பற்றியது.

ஹிஜாஸ் இஸ்புல்லா, பாராளுமன்றில் உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் நீதிமன்றம் இவர்களை விடுவித்து விடுதலை செய்துள்ளது. சஹ்ரானுடன் ஒன்றினைந்து செயற்பட்ட இருவர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆனால் சஹ்ரானை வீதியில் கண்டவர்கள், மேசையில் அமர்ந்து தேநீர் அருந்தியவர்கள் வருட கணக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாமை எந்தளவிற்கு நியாயமானது என்றார்.