பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாம்- இலங்கை இராணுவம்

313 0

இலங்கை மக்கள் சகலரினதும் நலன்களை கருத்திற்கொண்டு இலங்கை இராணுவம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாமென கோரிக்கை விடுக்கிறது.

அதற்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் நேற்று (21) மதியம் விடுக்கப்பட்ட விஷேட அறிக்கையில், கொவிட் – 19 நோய்ப் பரவல் உக்கிரமடைந்திருந்த போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும் பொதுமக்களால் படையினருக்கு வழங்கப்பட்ட ஆதரவு தொடர்பில் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்ற மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் எரிபொருள் விநியோகம் மற்றும் பொது மக்களின் போக்குவரத்துச் செயற்பாடுகளுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் சில தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதனால் பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போக்குவரத்துச் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக இராணுவம் மற்றும் ஏனைய படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் புதன்கிழமை (20) பொது மக்கள் சிலர் தாமாகவே முன்வந்து வீதித்தடைகளை அகற்றுவதையும் அவதானிக்க முடிந்ததையிட்டு அதற்காக பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.

அதனால் அண்மையில் ஏற்பட்ட கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் உக்கிரமடைந்திருந்த வேளையில் படையினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கிய ஒத்துழைப்புக்களை போன்றே தற்போதைய நெருக்கடியின் போதும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

அதனால் வீதி மறியல்களை தவிர்த்து பொது மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்துச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முழுமையான ஆதரவினை வழங்குமாறும் கேட்டுக்கொள்வதாக இராணுவத்தளபதி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.