நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் பிரேரணை சபாநாயகருக்கு கையளிப்பு

149 0

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து பாராளுமன்ற முறைமையை  உருவாக்கும்  பிரேரணைக்கான யோசனையை சபாநாயகருக்கு கையளித்திருக்கின்றோம். இதற்கு பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனையை எமது கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சபாநாயகருக்கு கையளித்திருக்கின்றார். அதனை செயற்படுத்த பாராளுமன்றத்தில் 225 பேரினதும் ஒத்துழைப்பு அவசியம். மிகவும் செயற்றிறன் மற்றும் வகிபாகம் கொண்ட அந்த திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும். அரசியலமைப்புக்கு உட்பட்ட ஜனநாயகத்திற்குள் நாங்கள் உட்பிரவேசிக்க வேண்டும்.

சமநிலை கொண்ட முத்தரப்பு அதிகார பரவலாக்கம் கொண்ட ஒரு முறைமையை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். முத்திரையில் வரையறுக்கப்பட்ட பாராளுமன்ற பேரவைக்கு பதிலாக மீண்டும் அரசியலமைப்பு பேரவையை கொண்டு வர வேண்டும். 20 ஆவது திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டும். நாட்டில் நல்லாட்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டிய பிரேரணைகளை முன்வைத்திருக்கின்றோம்.

அதேபோன்று தேசியப் பாதுகாப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி தேசிய பாதுகாப்பு பேரவையை அமைக்கவும் எதிர்பார்த்துள்ளோம். நாட்டில் இன்று அரசியல், சமூக ரீதியில் புரட்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழ் மட்டம் முதல் உயர்மட்டம் வரையில் புதிய பேரவையை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்த அரசியலமைப்பு திருத்தத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதுடன் 20ஆவது திருத்தத்தையும் முற்றாக நீக்கி, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்தி நல்லாட்சியையும் மக்கள் சேவையையும் புதிய பரிமாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.