காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் சபாநாயகர் கலந்துரையாட வேண்டும் – நாமல் ராஜபக்‌ஷ

300 0

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்கள் சிறந்த மாற்றத்தை உண்மை தன்மையுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இளைஞர்களின் போராட்டத்தை அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆகவே பாராளுமன்றில் நடுநிலையான தரப்பினர் என்ற ரீதியில் சபாநாயகர் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ சபையில் வலியுறுத்தினார்

பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அரசியலமைப்பு  திருத்தம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ள யோசனை வரவேற்கத்தக்கது.

ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்திற்கமைய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் புதிய அரசியலமைப்பு உரு வாக்கம் தொடர்பில் சாதமான முறையில் அவதானம் செலுத்தியுள்ளார்.

நாட்டில் பெரும்பாலான தலைவர்கள் இவ்விடயம் தொடர்பில் கருத்துரைத்த போதும் எவரும் அவற்றை செயற்படுத்தவில்லை.

2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை பொலிஸ் கட்டளைச்சட்டத்திற்கு முரணாக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் தற்போது பேசப்படுகின்றன.

இன்றும் பழைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்

வெளிநாடுகளில் சொத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சாட்சியங்களுடன் உலகில் எந்த நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்யுள்கள் எதிர்க்கொள்ள தயார்.

நாடு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை முன்னெடுப்பது பயனற்றது. நாட்டின் அடிப்படை பிரச்சினை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

காலி முகத்திடலில் பல இளைஞர்கள் உண்மையான நோக்கில் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு தரப்பினர் குறித்த போராட்டத்தை அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுப்படும் தரப்பினரை சபாநாயகர் சந்திக்க வேண்டும். அரசியல் கட்சிகள் இளைஞர்களின் போராட்டத்தை உரிமை கொண்டாட இடமளிக்க முடியாது என்றார்.