சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் 10 சதவீதம் அதிகரிப்பு

154 0

உள்நாட்டு சுற்றுலா தலங்களான காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், கோவா, அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லவும் பயணிகள் அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளனர்.கொரோனா வைரஸ் நோய் தோற்று தற்போது இந்தியாவில் குறைந்துள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

உள்நாட்டு விமான சேவை முழுவதுமாக இயங்கி வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதி முதல் வெளிநாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதையடுத்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பு விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை எப்படி இருந்ததோ மீண்டும் அதே அளவிற்கு பயணிகள் எண்ணிக்கை தற்போது இருக்கிறது. இதனால் விமான நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் வெளிநாடு, மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.

தற்போது கோடை காலமும்  தொடங்கி விட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு விரைவில் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுலா  இடங்களுக்கு செல்ல பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வெளிநாடுகளுக்கு விமான டிக்கெட் முன்பதிவு 10 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதே போல் சுற்றுலா தலங்களில் உள்ள விடுதி அறைகளையும் முன்பதிவு செய்கின்றனர். விமான டிக்கெட் கட்டணம் மட்டுமின்றி, விடுதி அறை கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

உள்நாட்டு சுற்றுலா தலங்களான காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், கோவா, அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லவும் பயணிகள் அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான இடங்களான பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, துபாய் ஆகிய நாடுகளுக்கு முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, துருக்கி, எகிப்து, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா நாடுகள் செல்ல மக்கள் விரும்புகின்றனர்.

தற்போது நேபாளம் மற்றும் தென்னாப்பிரிக்காவும் பிரபலமான இடங்களாக வளர்ந்து வருகின்றன. வெளிநாட்டு இடங்களுக்கான முன்பதிவு கடந்த மாதத்தில் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டது. இதேபோல் உள்நாட்டு இடங்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், மேகமலை, வால்பாறை, குன்னூர், உள்ளிட்ட இடங்கள் கோடைகால சுற்றுலா இடங்களாக திகழ்கிறது. தங்குமிடங்களை நடத்தி வருபவர்களும் அதிக அளவில் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 35 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடை காலத்தில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு உற்சாகம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக டிராவல்ஸ் ஏஜெண்டுகள் கூறியதாவது:-

கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. பயணிகளின் ஆர்வமும் குறைவாகவே காணப்பட்டது. தற்போது வெகுவாக குறைந்து வரும் வைரஸ் தொற்று காரணமாக அதிக அளவில் மக்கள் வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் செல்கின்றனர். இப்போது முன்பதிவு செய்ய ஒரு நாளைக்கு 100 அழைப்புகள் வருகின்றது. கடந்த 1½ மாதங்களாக  பிசியாக உள்ளோம்.

விடுமுறை பேக்கேஜ்கள், விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடங்கள் கூட ஆகஸ்டு வரை பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த 2019 -ம் ஆண்டுக்கு பின்பு தற்போது தான் தொழிலில் ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. வாரத்திற்கு வாரம் இது ஏற்றம் அதிகமாக உள்ளது.

உள்நாட்டு இடங்களுக்கு முன்பதிவு செய்வதும் அதிகமாக உள்ளது. இதில் குடும்பத்தினர், இளம் தொழில் வல்லுநர்கள், நண்பர்கள் குழுக்கள் மற்றும் தம்பதிகள், காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட், முசோரி, சிம்லா, ரிஷிகேஷ், லே- லடாக் மற்றும் அந்தமான் செல்ல அதிகம் விரும்புகின்றனர். மலைபிரதேசங்களில் உள்ள ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொரோனா நோய்த்தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. கடந்த 17-ந்தேதி மொத்தம் இயக்கப்பட்ட 346 விமானங்களில் அதிகபட்சமாக 50 ஆயிரத்து 600 பேர் பயணம் செய்து உள்ளனர். இனிவரும் நாட்களிலும் விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் சென்னையில் இருந்து பிரான்சு நாட்டுக்கு இயக்கப்படும் விமான சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி பாரீஸ் நகரத்திற்கு வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் ஏர்பிரான்ஸ் விமானம் இயக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், மேகமலை, வால்பாறை, குன்னூர், உள்ளிட்ட இடங்கள் கோடை காலத்திற்கு ஏற்ற சுற்றுலா இடங்களாக உள்ளது. பயணிகள் அதிக நேரம் பயணம் செய்வதை விட சுற்றுலா தலத்தில் நேரத்தை செலவிட விரும்புகின்றனர்.

அதனால் இந்த ஊர்களுக்கு செல்ல  பஸ் மற்றும் ரெயில்களை தேர்வுசெய்வதை காட்டிலும் விமானத்தில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். இதனால் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமான டிக்கெட் கட்டணம் சராசரியாக  உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை தமிழக அரசு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.