மாமல்லபுரத்தில் பழங்கால கோவில் கலசம், கல் தூண்களை ஆய்வு செய்ய தொல்லியல் துறை முடிவு

245 0

மாமல்லபுரத்தை ஆட்சி செய்த மன்னர் பராங்குசன் 7 கோயில்கள் கட்டியதாகவும் அதில் ஒன்று 108 திவ்யதேசங்களில் 63-வது திவ்யதேசமான தலசயன பெருமாள் கோயில் எனவும், 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதி மீனவர்கள் குடியிருப்பு பகுதி கடலோரத்தில் நேற்று மாலை கடல் உள்வாங்கியது. அப்போது பழங்காலத்து கோயில் கல்கலசம், தூண்கள், செங்கல்கள் கரை ஒதுங்கி இருந்தது.

கடற்கரை கோவில் வடிவமைத்தபோது கடல் பல மீட்டர் தூரத்துக்கு பின்னோக்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முதலாம் நரசிம்ம பல்லவ மன்னனால் சில சிறிய கோவில்கள் அங்கு கட்டப்பட்டதாகவும் காலப்போக்கில் கடல் முன்னோக்கி வந்தபோது அந்த கோவில்கள் கடலில் மூழ்கி விட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

இந்த நிலையில் இன்று காலையில் இருந்தே உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு சென்று கரைஒதுங்கிய கோவிலின் கருங்கற்கள், தூண்கள், கலசம் உள்ளிட்டவற்றை ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள். இதனை ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

இதுபற்றி மாமல்லபுரம் தொல்லியல்துறை அலுவலகத்தில் கேட்டபோது கூறியதாவது:-

7-ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆட்சி செய்த மன்னர் பராங்குசன் 7 கோயில்கள் கட்டியதாகவும் அதில் ஒன்று 108 திவ்யதேசங்களில் 63-வது திவ்யதேசமான தலசயன பெருமாள் கோயில் எனவும், 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த கலசங்கள், தூண்கள், செங்கல்களை பார்க்கும்போது சுற்றுச்சுவர் கட்டிடம் போன்றும் தெரிகிறது. கோவிலை பாதுகாக்க போடப்பட்ட சேதமடைந்த கற்கள் போன்றும் தெரிகிறது. கடற்கரையில் ஒதுங்கி இருப்பது பழங்கால கோயில்தான் என உறுதியாக இப்போது கூறமுடியாது.

சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் தொல்லியல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று அல்லது நாளை தொல்பொருள், கல்வெட்டு ஆய்வாளர்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டிடக்கலை பேராசிரியர் கொண்ட ஆய்வுக் குழுவினர் வந்து கலசத்தையும், தூண்களையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதன் பின்னர் இது கோயிலா? சுற்றுச்சுவரா? என்பது தெரியவரும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.