பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரிய நவாஸ் ஷெரீப் மகள் மனு தள்ளுபடி

173 0

நவாஸ் ஷெரீப் மகளான மரியம் நவாஸ் தனது பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு ஒரு ஊழல் வழக்கில் அவருக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீன் அளித்தது. அப்போது ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின்பேரில், தனது பாஸ்போர்ட்டை ஐகோர்ட்டில் ஒப்படைத்தார்.

இந்தநிலையில், லாகூர் ஐகோர்ட்டில் மரியம் நவாஸ் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘உம்ரா’ கடமையை நிறைவேற்ற அடுத்த வாரம் சவுதி அரேபியா செல்ல வேண்டி இருப்பதாகவும், ஆகவே தனது பாஸ்போர்ட்டை திருப்பித்தருமாறு ஐகோர்ட்டு துணை பதிவாளருக்கு உத்தரவிடுமாறும் அவர் கோரி இருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஷாபாஸ் அலி ரிஸ்வி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி அதை அமர்வு தள்ளுபடி செய்தது.லாகூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்புமாறும், அதன் அடிப்படையில் உரிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.