பாற்சோறுடன் கொண்டாடிய சிங்களவர்கள்! இன்று அவர்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வந்துள்ளது!

185 0

2009இல் இதே மாதத்தில் பாற்சோறு கொடுத்து சிங்கள மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர், இன்று அவர்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இலங்கையில் தெளிவாக நடைமுறையில் இன்று இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இரத்தக் கறைகளால் எழுதிய வரலாறுகளில் ஏப்ரல் 21 தாக்குதலும் உள்ளடங்கின்றது. சஹ்ரான் என்ற தனிநபரை மையமாகக் கொண்டு இந்த விடயம் கூறப்படுகின்றது.

ஆனால் இதற்கு பின்னால் பெரிய அரசியல் பின்புலங்களும், அரசியல் நடவடிக்கைகளும் உள்ளதாக கூறப்படுகின்றது. பல இடங்களில் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 90 வீதமானவர்கள் தமிழர்களே.

யுத்தத்திலும் தமிழர்களே கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதலை நடத்தியது யார்? அதன் சூத்திரதாரிகள் யார்? இதன் பின்னணி என்ன? என்பதனை இராணுவ மற்றும் பொலிஸ் பலம் இருந்தும் வருடங்கள் கடந்தும் இன்னும் நிரூபிக்க முடியவில்லை.

இது தொடர்பில் நீதியான அறிக்கையை நாங்கள் இன்னும் வெளியில் காணவில்லை. இதேவேளை கேகாலை – ரம்புக்கனையில் சிங்கள இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவருக்கு எமது அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.

பல போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கின்றனர். இந்த நாட்டில் ராஜபக்‌ச குடும்பத்தை வெளியேறுங்கள் என்று மக்கள் பேராடுகின்றனர். அந்த நிலையிலேயே ரம்புக்கனையில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அதில் கொல்லப்பட்டவருக்கு நாங்கள் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு இப்போது கொதிநிலையில் உள்ளது. நீதியான தலைமைத்துவத்தில் இந்த நாடு இல்லை.

நாட்டில் நடந்த படுகொலைகளுக்கு எந்தவொரு தலைவரும் வருத்தம் தெரிவித்ததாக வரலாறுகள் இல்லை. யுத்தத்திற்கு பின்னர் ராஜபக்சவினருக்கு எதிராக பொது வேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேகாவுக்கு தமிழர்கள் வாக்களித்தனர்.

அதேபோன்று 2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். 2019 இலும் தமிழர்கள் கோட்டாபயவிற்கு எதிராகவே வாக்களித்தனர். ராஜபக்ச குடும்பத்தினர் இந்த மண்ணில் ஆட்சி செய்ய வல்லமமையற்றவர்கள் என்பதனாலேயே எதிர்த்து வாக்களித்தனர்.

அதனால் வீதிகளில் போராடும் சிங்கள சகோதர, சகோதரிகளிடம் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நாங்கள் இவற்றை முன்னரே செய்தவர்கள். நாங்கள் போராடும் போது நீங்கள் மௌனம் காக்க வைக்கப்பட்டீர்கள்.

2009இல் இதே மாதத்தில் பாற்சோறு கொடுத்து சிங்கள மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இன்று அவர்கள் அதனை புரிந்துகொள்ளும் காலம் வந்துள்ளது. நாங்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். நாங்கள் வந்தேறிக் குடிகள் அல்ல.

விஜயன் வருவதற்கு முன்னரே இங்கு வாழ்ந்துள்ளோம். வடக்குக் கிழக்கு எங்களின் தாயக மண் என்று எப்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உங்களுடன் சேர்ந்து போராட விரும்புகின்றோம்.

ராஜபக்சவினர் வெளியேறிய பின்னர் தமிழருடைய தேசம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? நாங்களும் நீங்களும் நாட்டின் தேசியப் பிரஜைகள் என்று எப்போது உருவாகும்.

இதே காலிமுகத்திடலில் தந்தை செல்வாவின் தலைமையில் அறவழிப் போராட்டத்தை தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த போது சிங்கள காடையர்களினால் தாக்கப்பட்ட வரலாற்றை சிந்தித்துப் பாருங்கள்.

பல இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். நான் சிங்கள மக்களுக்கு எதிரானவனும் அல்ல. அவர்களை எதிரியாக பார்ப்பவனும் அல்ல.

அவர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை மதிக்கின்றவன். ஆனால் எங்கள் மீது நீட்டப்படும் துப்பாக்கிகள், செய்யும் கொலைகள் என்றோ ஒருநாள் சிங்கள மக்கள் மீது திரும்பும்.

அப்போது சிங்கள மக்கள் புரிந்துகொள்வார்கள். அன்றைய பிரபாகரனின் தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இலங்கையில் தெளிவாக நடைமுறையில் இன்று இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.