அமைதியை ஏற்படுத்த முயற்சி… புதின், ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர்

193 0

ஐ.நா. பொதுச்செயலாளரின் கடிதங்கள் ரஷியா மற்றும் உக்ரைனின் நிரந்தர தூதரகங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார். அதில், இருவரையும் நேரில் சந்தித்து பேச உள்ளதாக கூறி உள்ளார்.
இந்த கடிதங்கள் ரஷியா மற்றும் உக்ரைனின் நிரந்தர தூதரகங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.
ரஷிய அதிபர் புதின் மாஸ்கோவிலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கியு நகரிலும் தன்னை வரவேற்கும்படி ஐ.நா. பொதுச்செயலாளர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டார். பெரும் ஆபத்து மற்றும் விளைவுகளின் இந்த நேரத்தில், ஐ.நா. சபையின் அடிப்படை ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உக்ரைனில் அமைதி மற்றும் எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க விரும்புவதாக பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார்.
உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளும், ஐ.நா. சபையின் ஸ்தாபக உறுப்பினர்கள் என்றும், ஐ.நா. சபையின் வலுவான ஆதரவாளர்களாக எப்போதும் இருந்து வருவதாகவும் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.