வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்- இம்ரான் கான் மீது பாகிஸ்தான் அரசு புகார்

161 0

இம்ரான் கான் தினசரி ஹெலிகாப்டரில் பயணம் செய்ததன் மூலம் மூன்று ஆண்டுகளில், அரசுக்கு 550 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் செலவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாகவும் இதற்கு இம்ரான் கான்தான் காரணம் என்று கூறி வந்த அந்நாட்டு எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தில் நம்பியில்லா தீர்மானம் மூலம் அவரது அரசை கவிழ்த்தனர்.
இந்நிலையில், இம்ரான் கான் ஆட்சியில் இருந்த போது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், தனது வீட்டில் இருந்து பிரதமர்  அலுவலகத்திற்குச் செல்ல ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினார் என்றும், அந்த ஹெலிகாப்டருக்கான எரிபொருளுக்கு அரசு பணம் செலவிடப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இம்ரான்கானின் ஹெலிகாப்டர் பயணம் மூலம் கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களில் தேசிய கருவூலத்திற்கு 550 மில்லியன் பாகிஸ்தான் பணம் செலவாகியுள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது குற்றச்சாட்டை மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி, பாதுகாப்பு காரணங்களுக்காகவே  இம்ரான் கான் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாகவும், இந்த பயணத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு பாகிஸ்தான் பணம் 55 மட்டுமே செலவாகும் என தெரிவித்துள்ளார்.