லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்: ஜெலன்ஸ்கி கவலை

155 0

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 52-வது நாளாக நீடிக்கும் நிலையில்,உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளை ரஷியா எச்சரித்துள்ளது.

16.04.2022
03.20:  உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.
02.30: உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு,  அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு ரஷியா வலியுறுத்தி உள்ளது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ரஷியா எச்சரித்துள்ளதாக  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
01.40: மரியுபோல் நகரில் எஃகு ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
12.30: உக்ரைனில் அதிக குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகும்  மைகோலைவ் உட்பட சண்டை நடைபெறும் பகுதிகளுக்கு செல்ல மரியுபோல் பகுதி மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
15.04.2022
21.50: உக்ரைனில் போர் பகுதிகளில் சிக்கிய பொதுமக்கள் பட்டினியால் வாடுவதாகவும், அவர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
21.15: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 50 நாளுக்கு மேலாகிறது. ரஷியாவுடனான போரினால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 50 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
17.30: உக்ரைன் போர் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் உணவு நெருக்கடியை ஆழமாக்குகிறது. ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா, சூடான், தெற்கு சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய 7 ஹாட்ஸ்பாட்களுக்கு அதன் அவசரகால நிதியிலிருந்து 100 மில்லியன் டாலர்கள் வழங்க உள்ளோம் என ஐ.நா. அறிவித்துள்ளது.
15.30: இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசை சந்தித்தார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபை தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர்,  ஐ.நா. பொதுச்செயலாளருடன் உக்ரைன் விவகாரம் குறித்து பரந்த விவாதம் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
05.50: உக்ரைனில் ரஷிய படையெடுப்பு தொடங்கியது முதல் கார்கிவ் பகுதியில் குறைந்தது 503 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாகாண ஆளுநர்  ஓலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 24 பேர் குழந்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கார்கிவ் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியப் படைகள் ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் சினெகுபோவ் குறிப்பிட்டுள்ளார்.
04.40: உக்ரைன் போரில் ரஷிய படைகளுக்கு ஏற்படும் பின்னடைவு,  குறைந்த பாதிப்புள்ள அணு ஆயுதங்களை ரஷிய அதிபர் புதின் பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும் என்று அமெரிக்காவின் சிஐஏ  இயக்குநர் எச்சரித்துள்ளார்.
03.30: உக்ரைன் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர் கப்பல் சேதம் அடைந்து தீப்பிடித்ததாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.ஒடேசாவிற்கு
தெற்கே 60 முதல் 65 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் தீப்பிழம்புடன் காணப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். சேதமடைந்த மாஸ்க்வா ஏவுகணை கப்பல் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது நீரில் மூழ்கியதாக ரஷிய ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.  போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக அதில் இருந்த ஆயுதங்கள் சேதமடைந்ததாகவும், எனினும் ஊழியர்கள் உடனடியாக வெளியேறி விட்டதாகவும் ரஷியா குறிப்பிட்டுள்ளது.
02.10:  ரஷியாவின்  பிரையன்ஸ்க் பிராந்தியம் மீது உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
01.30: உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களை இனப்படுகொலை என்று சொல்வதை  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது குறித்து பேசிய மக்ரோன், அந்த வார்த்தை அரசியல்வாதிகளால் அல்ல, சட்ட வல்லுநர்களால் உச்சரிக்கப்பட வேண்டும் என கூறினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியதாகவும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர எல்லாவற்றையும் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
14.4.2022
21.50: ரஷிய ஆக்ரமிப்பிற்கு எதிரான உக்ரைன் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில், அயர்லாந்து வெளியுறவு மந்திரி சைமன் கோவேனி கீவ் நகருக்கு சென்றுள்ளார். உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா மற்றும் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் ஆகியோரை கோவேனி சந்தித்துள்ளதாக அயர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
21.10:  உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷிய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தனது  தூதரகத்தை விவில் நகரில் இருந்து கீவ்விற்கு மீண்டும் இடமாற்றம் செய்ய பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் பிரதிநிதியுடன், பிரான்ஸ் வெளியுறவு மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து தூதரக இடமாற்றம் குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
05.50: ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். மேலும், கீவ் நகருக்கு வந்து ஆதரவு தெரிவித்த நேட்டோ நாடுகளைச் சேர்ந்த அதிபர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.