மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழி சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது – ராமதாஸ் கண்டனம்

169 0

4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. தடையில்லா சான்றிதழழை ஒப்படைப்பதில் காலம் தாழ்த்தி வருவதால் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்காக அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை துறை நாட்டின் பல்வேறு தேசிய சாலைகளை மேம்படுத்தப்பட்ட வேகம் மற்றம் பாதுகாப்புக்காக 4 வழி சாலைகளாக மாற்றி வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பாரத் மாலா பரியோஜனா திட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் இது அமைக்கப்படுகிறது.
இந்த வகையில் மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. தடையில்லா சான்றிதழழை ஒப்படைப்பதில் காலம் தாழ்த்தி வருவதால் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்காக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 8-ந் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலைகைள் ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யா தமிழக தலைமை செயலாளர் இறையன்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இதற்கு முன்பு சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் நெடுஞ்சாலை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 2 கடிதங்கள் அனுப்பப்பட்டது. தடையில்லா சான்றிதழ் தருவதை விரைவு படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. எந்த பதிலும் வரவில்லை. மேற்கண்ட சாலையை ஒப்படைக்க தமிழக அரசு முன்வரவில்லை. இதனால் மகாபலிபுரம்- புதுச்சேரி இடையேயான 4 வழிச் சாலை திட்டத்தை கைவிடுகிறோம். இதற்காக அந்த சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானத்திற்கு முந்தை பணிகளை கைவிடுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலைதுறை கடிதம் எழுதிய 3 தினங்களுக்கு பிறகு மாநில தடையில்லா சான்றிதழ் வழங்கியதற்காக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிழக்குக் கடற்கரை சாலையில், மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான பகுதியை 4 வழிச்சாலை ஆக மாற்றும் திட்டம் கைவிடப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்காதது தான் இதற்கு காரணம் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
கிழக்குக் கடற்கரை சாலையை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக்கழகம் தான் அமைத்து நிர்வகித்து வருகிறது. அந்த சாலையில் இந்த நிறுவனம் தான் சுங்கக்கட்டணமும் வசூலித்து வருகிறது. கிழக்குக் கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பதால் ஏற்படும் இழப்பையும், அதற்காக வாங்கப்பட்ட கடனையும் ஈடுகட்டுவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரூ.222.94 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டதும், அதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்புக்கொள்ளாததும் தான் சிக்கலுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கடிதம் கிடைத்த பிறகு தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, கிழக்கு கடற்கரைச் சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கான தடையின்மை சான்றிதழை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்திற்கு ரூ.223 கோடி இழப்பீடு பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் நிலையில் பேசப்போவதாகவும் நிபந்தனை விதித்திருப்பதாக தெரிகிறது. இதை ஆணையம் ஏற்குமா? என்பது தெரியவில்லை.
மத்திய அரசிடமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடமும் தமிழக அரசு செயலாளர் நிலையில் பேசி, 4 வழி கிழக்குக் கடற்கரைச்சாலை திட்டப்பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.