கன்னியாகுமரி மாவட்டத்தில் மத மாற்ற புகார் அடிப்படையில் ஆசிரியை பணியிடை நீக்கம்- அமைச்சர் விளக்கம்

173 0

மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தையல் ஆசிரியையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை பியாட்ரிஸ் தங்கம், தையல் வகுப்புக்கு வரும் இந்து மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாகவும் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை செய்ய வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதையடுத்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தையல் ஆசிரியை பியாட்ரிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் தையல் ஆசிரியை பியாட்ரிஸ் தங்கத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த சம்பவத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டம் ஆட்சியர் மூலம் தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மாணவி அளித்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும்,  முழுமையான விசாரணைக்கு பிறகு அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.