அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தியடைந்த நாடு என்ற கட்டத்திற்கு இலங்கையை கொண்டு செல்வதே எமது நோக்கம்- ரணில்

245 0

 

அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தியடைந்த நாடு என்ற கட்டத்திற்கு இலங்கையை கொண்டு செல்வதே தமது நோக்கம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முத்துராஜவல கைத்தொழில் வலயத்தில் தொழில் நகரத்தின் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர், தொழில்வாய்ப்புத் துறையில் தீவாக இருக்கும் இலங்கையை உப கண்டமாக மாற்ற அனைத்து பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக பாரிய அபிவிருத்தி செயற்றிட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக கூறினார்.

இந்த நடவடிக்கை மிகப் பாரிய சவாலான விடயம் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், வரலாற்றில் ஆசியாவும், இந்து சமுத்திர வலயமும் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருந்த தருணத்தில் இலங்கைதான் அதன் மத்திய நிலையமாக செயற்பட்டதாக சுட்டிக்காட்டினார்.