விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் மெக்சிகோவின் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இதுபற்றி விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான அகாபுல்கோவில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. 9 பேர் அமரக்கூடிய இந்த விமானத்தில் விமானி உள்பட 4 பேர் பயணித்தனர்.
இந்த விமானம் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கு 10 கி.மீ. தொலைவுக்கு முன்பாக மோரேலோஸ் மாகாணத்தின் டெமிக்ஸ்கோ நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் நடுவானில் திணறியது. விமானத்தில் இருந்தவர்கள் பயத்தில் மரண ஓலமிட்டனர். இதை தொடர்ந்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
எனினும் அவரது கட்டுக்குள் வராத விமானம் டெமிக்ஸ்கோ நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் மீது விழுந்தது. சூப்பர் மார்க்கெட்டின் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்த விமானம் உடைந்து நொறுங்கியது. விமானம் சூப்பர் மார்க்கெட் மீது விழுந்தபோது குண்டு வெடித்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் விமானம் விழுந்து நொறுங்கி கிடப்பதை கண்டு அதிர்ந்துபோயினர். பின்னர் தீவிர மீட்பு பணியில் இறங்கிய அவர்கள் இது குறித்து போலீசாருக்கும், மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் விமானம் மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்றினர். அதன் அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் 3 பேரும் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.
மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் மெக்சிகோவின் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இதுபற்றி விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.