சீனா, இந்தியா, அமெரிக்காவின் படையெடுப்புக்குரிய நாடாக இலங்கை மாறியுள்ளது – அஷோக அபேசிங்க

184 0

ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் தாய்நாட்டை வெளிநாட்டவர்களுக்கு காட்டிக்கொடுத்ததன் பலனாகவே இலங்கை இன்று சீனா, இந்தியா, அமெரிக்காவின் படையெடுப்புக்குரிய நாடாக மாறியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 1 பில்லியன் கடன் தொகையில் 750 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவில் இருந்து மட்டுமே வாங்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட பின்னரே அவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் தாய்நாட்டை வெளிநாட்டவர்களுக்கு காட்டிக்கொடுத்ததன் பலனாகவே இலங்கை இன்று சீனா, இந்தியா, அமெரிக்காவின் படையெடுப்புக்குரிய நாடாக மாறிவிட்டது.

கடன்களை மீள செலுத்த முடியாத நிலையில் நாடு காணப்படும் போது, மேலும் கடன் வழங்குவதற்கு ஏதேனும் நாடுகள் முன்வருமாயின் அவற்றுக்கு சொத்துக்கள் வழங்கப்பட வேண்டும்.

அதனையே ராஜபக்ஷக்கள் செய்து கொண்டிருக்கின்றனர். ராஜபக்ஷர்களே இலங்கையில் அதிகளவு வெளிநாட்டு கடனைப் பெற்றுள்ளனர். நாட்டில் எரிசக்தியை இந்தியா கட்டுப்படுத்துகிறது. எரிபொருள் விலையையும் இந்தியாவே தீர்மானிக்கிறது.

கடன் பெறுவதற்காக தேசிய வளங்களை விற்கின்றனர். மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படப் போகிறது என்ற தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

விமானிகளை இந்திய அதிகாரிகள் நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எம்.சி.சி. ஒப்பந்தத்தை வேறு பெயர்களில் இந்தியாவுடன் கையெழுத்திட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியிடம் வேலைத்திட்டம்  உள்ளது. ஆனால் இதை ஒரே இரவில் செய்ய முடியாது.

இந்நாட்டை மீட்க சுமார் இருபது பில்லியன் டொலர்கள் தேவைப்படும்.இந்த அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையும் சிக்கலானதாகும்.

19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் உலக நாடுகளுக்கு எம்மீது இருந்த நம்பிக்கை முற்றாக சிதைந்து போயுள்ளது.

நாட்டில் மீண்டும் குடும்ப ஆட்சி அமையக் கூடாது என்று சகல தரப்பிடமிருந்தும் கருத்துக்கள் வெளி வருகின்றன. அரசாங்க செலவில் எழுபது சதவீதம் செலவிடப்படுகிறது.

குடும்ப ஆட்சி ஜனநாயகத்தை அழித்துவிடும். இந்த குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் எம்மால் முன்னெடுக்கப்படும் என்றார்.