மின் கட்டணங்கள், எரிவாயு விலைகள், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது – அரசாங்கம்

155 0

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இரு மாதங்களுக்கு இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதே வேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் வலு சக்தி அமைச்சர் காமினி லொகுகே ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ,

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு 5000 ரூபாய் விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவை பெறுவதற்கு சுமார் 31 இலட்சம் குடும்பங்கள் தகுதி பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த கொடுப்பனவை வழங்குவதற்கான நிதி அரசாங்கத்திடம் காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

நீர் மின் உற்பத்தி எதிர்பாராதளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் காணரமாகவே மின் துண்டிப்பினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளது.

அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை அதிகரித்தமையால் மீண்டும் அதற்கான நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் காமினி லொகுகே இதன் போது சுட்டிக்காட்டினார்.

கடந்த புத்தாண்டின் போதும் , கொவிட் தொற்றினால் நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு நாட்டு மக்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின் கட்டணங்கள், எரிவாயு விலைகள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மின் கட்டணம் மற்றும் எரிவாயு விலைகளை அதிகரிப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.