உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா படையெடுப்பால் உக்ரைனில் இருந்து இதுவரை 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர் என ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
14.50: போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு மூன்று மனிதாபிமான வழிகளை உருவாக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார். எனினும் அந்த வழிகளில் தாக்குதல் நடத்த ரஷிய படைகள் திட்டமிட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியேற்றம் நிறுத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14.20: சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுதியிருந்த கடிதத்தை ரஷியாவின் அதிகாரப்பூர்வமற்ற தூதராக செயல்படும் தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச், புதினிடம் ஒப்படைத்ததாகவும் அப்போது உக்ரேனியர்களை தொடர்ந்து தாக்குவேன் என புதின் தெரிவித்ததாகவும் பிரிட்டிஷ் நாளிதழான தி டைம்ஸ் கூறியுள்ளது.
13.50: உக்ரைன்-ரஷியா இடையேயான பேச்சுவார்த்தை துருக்கியில் தொடங்கி உள்ளதாக உக்ரைன் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தையின்போது சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் தீர்வு எட்டப்படும் என துருக்கி அதிபர் எர்டோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
12.20: மரியுபோல் நகரம் இன்னும் உக்ரைன் ராணுவ கட்டுப்பாட்டில் தான் உள்ளதாக பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனினும், ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் மூலம் தலைநகர் கீவ்வை அச்சுறுத்தி வருவதாகவும், அதற்கு உக்ரைன் படையினரும் பதிலடி கொடுத்து வருவதாகவும் பிரிட்டன் ராணுவ உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
09.50: உக்ரைனில் பாதுகாப்பு பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷியா போர் தொடுத்த நாள் முதல், உக்ரைனை விட்டு 36 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
06.15: ரஷிய அதிபர் புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனக் கூறிய அதிபர் ஜோ பைடன், நான் உணரும் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன் என தெரிவித்துள்ளார்.
04.20: நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அறிவிப்பை ஜி-7 நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை என ஜெர்மனியின் எரிவாயு மந்திரி ராபர்ட் ஹாபெக் தெரிவித்தார்.
02.15: ரஷியா போர் தொடுத்ததால் உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகாம் கடும் செயலிழப்பைச் சந்தித்துள்ளது. இதற்கு சைபர் தாக்குதல் காரணமா என விசாரித்து வருகிறோம் என கீவ் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
00.15: போருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முராடோவின் நோவா கெஜட் என்ற நாளிதழை ரஷிய அரசு தடை செய்துள்ளது. இதன் உரிமையாளரான டிமிட்ரி முராடோவ் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.