பெருவிளையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு என மேயர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டபோது நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு உத்தரவிட்டார்.
அதன்படி பெருவிளை கணினி வரிவசூல் மையம் அருகில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில்:-
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது நாகர்கோவிலில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
அதன் அடிப்படையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு அவர் அனுமதி அளித்துள்ளார் .இதையடுத்து பெருவிளையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது .15 சென்ட் நிலத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
படுக்கை வசதிகள் மற்றும் பிரசவம் வசதிகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படும். இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். இதற்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.
ஆய்வின்போது மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன் நகரமைப்பு ஆய்வாளர் கெபின்ஜாய் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.