பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப, எரிபொருள் விலைகளை சமநிலைப்படுத்துமாறு ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை ஐ.ஓ.சி. நிறுவனம் நடைமுறைப்படுத்தாமையினால் , அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எரிபொருள் நெருக்கடி தற்போது படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகிறது. கேள்விக்கு ஏற்ற தொகையை விநியோகிக்க முடியாமையே தற்போது எமக்குள்ள பிரச்சினையாகும்.
வரையறுக்கப்பட்டளவில் எரிபொருளை வழங்கும் போது கலன்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் வீதம் குறைவடையும். இவ்வாறு பாரிய கலன்களின் எரிபொருளைப் பெறுபவர்கள் சொந்த தேவைக்காக அன்றி , 75 சதவீதமானோர் அதிக விலைக்கு விற்பதாகவே எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களே இன்று ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு காரணமாகும். சுத்தீகரிப்பு நிலையங்களுக்கு தேவையான மசகு எண்ணெண்யை இறக்குமதி செய்தால் எமது தேவையில் 30 சதவீதமான பெற்றோல் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாரம் 40,000 மெட்ரிக் தொன் எண்ணெய் கப்பல்கள் இரண்டை வரழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப, எரிபொருள் விலைகளை சமநிலைப்படுத்துமாறு ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான நடவடிக்கையை அந்நிறுவனம் முன்னெடுக்கவில்லை.
எனவே ஒப்பந்தத்தின் படி இதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.