இம்மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனைகளின் போது உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 407 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பொருட்கள் கொள்வனவின்போது நுகர்வோர் போதிய கவனம் செலுத்த வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“விசேடமாக, தற்போது நாட்டில் நிலவிவரும் மின் துண்டிப்பு காரணமாக குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட வேண்டிய உணவுப் பொருட்கள் கெட்டுப்போகின்றமை குறித்து கண்டறியப்பட்டுள்ளது. மீன் மற்றும் இறைச்சி வகைகள் கெட்டுப்போகின்றது.
மளிகைக் கடைகள் மற்றும் மீன், இறைச்சி விற்பனை நிலையங்களில் உள்ள பொருட்கள் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாதவையாக அமைந்துள்ளன.
இந்நாட்களில் பலகாரங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் தயாரிக்கப்படும் என்பதால், தரம் குறைந்த அல்லது காலாவதியான தேங்காய் எண்ணெய் போன்றவை சந்தையில் காணப்படும். இவை குறித்தும் நாம் தீவிர கண்காணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.
மளிகை பொருட்களை கொள்வனவு செய்யும் போது, உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி, தரம் குறித்து நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும். அதில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்கள் குறித்தும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்தும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்தால் அது குறித்தும் நுகர்வோர் விசேட கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
மேலும், நாட்டில் மின் துண்டிப்பு நிலவி வருவதால் குளிர்ச்சாதனப் பெட்டிகளில் வைத்திருக்கக்கூடிய பொருட்களுக்கான வர்த்தகத்தில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வர்த்தகர்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.