சர்வகட்சி மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடுவது அவசியமாகும். இதன் ஊடாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்களுக்கும் அவர்களது நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் அதே வேளை , பாராளுமன்றத்தின் ஊடாக தேசிய இணக்கப்பாட்டினையும் எட்ட முடியும் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு தேசிய இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தோம். இதன் பொருள் தேசிய அரசாங்கம் அல்ல.
பாராளுமன்றத்தினுள் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணக்கப்பாடொன்றை எட்ட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகக் காணப்பட்டது. காரணம் இந்த வழிமுறைகள் எதிர்வரும் 5 – 10 வருடங்கள் தொடரும். அடுத்த தேர்தல்களின் பின்னர் இதனை மாற்ற முடியாது.
பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பிரத்தியேக விவாதமொன்று நடத்தப்பட வேண்டும் என்று நான் யோசனையை முன்வைத்திருந்தேன். கடந்த காலத்தை பற்றி பேசுவது பிரயோசனமற்றது.
நடைமுறை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதே சிறந்ததாகும். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியை சந்தித்த போது சர்வகட்சி சம்மேளனத்தைக் கூட்டுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதற்கமையவே கடந்த வாரம் சர்வகட்சி சம்மேளனம் நடத்தப்பட்டது.
பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் பேசுவது சிறந்ததாகும். காரணம் சர்வகட்சி மாநாட்டில் கட்சி தலைவர்கள் மாத்திரமே கலந்து கொள்வர்.
ஆனால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்களுக்கும் அவர்களது நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இதன் ஊடாக பாராளுமன்றத்தில் தேசிய இணக்கப்பாட்டினை எட்ட முடியும். இதன் முதற்படியாக கட்சி தலைவர்கள் சந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.