துறைமுகத்தில் சிக்கிய 600 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன்

190 0

மீள் ஏற்றுமதிக்காக இலங்கையின் கொழும்பு துறைமுக வளாகத்துக்கு எடுத்துவரப்பட்டிருந்த  20 அடி நீளமான கொள்கலன் ஒன்றுக்குள் இருந்து 600  கோடி ரூபா பெறுமதியான  கொக்கைன் போதைப் பொருளினை இலங்கை சுங்கப் பிரிவினர் நேற்று (23) கைப்பற்றினர்.

சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உளவுச் சேவைக்கு  சர்வதேச அளவில் கிடைத்த தகவல் ஒன்றினை மையப்படுத்தி,  ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பழைய இரும்புப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்ட  நான்கு கொள்கலன்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் ஒன்றிலிருந்து இந்த கொக்கைன் போதைப் பொருள்  கைப்பற்றப்பட்டது.

சுமார் 350 கிலோகிராம்  கொக்கைன் இவ்வாறு  கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின்  ஊடகப் பேச்சாளரும் அத்திணைக்களத்தின் சட்டப் பணிப்பாளருமான சுதத்த சில்வா குறிப்பிட்டார்.

தென் அமரிக்காவின் பனாமாவில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த கப்பலில் இருந்த,  திருப்பி அனுப்பப்பட்ட (மீள் ஏற்றுமதி)  பழைய இரும்புப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்ட கொள்கலனில் மிக சூட்சுமமாக 10 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கொக்கைன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கலன்கள் பனாமாவிலிருந்து பெல்ஜியம்,  டுபாய் ஊடாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், இலங்கையூடாக  இந்த  கொக்கைன் போதைப் பொருள்  இந்தியாவிற்கு அனுப்ப தயாராகியிருந்த நிலையில், இலங்கை சுங்கப் பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே  இந்த போதைப் பொருள் தொகை கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் ஆரம்பகட்ட சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த கொக்கைன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கைப்பற்றப்பட்ட 600 கோடி ரூபா பெறுமதியான இந்த கொக்கைன் தொகை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசரணைகளை ஆரம்பித்துள்ளனர்.