முழு நாட்டையும் மூன்று சர்வாதிகார நாடுகளிடம் அடகு வைத்து கொண்டிருக்கிறது அரசு

167 0

முழு நாட்டையும் மூன்று சர்வாதிகார நாடுகளிடம் அடகு வைத்துக் கொண்டிருப்பதாகத் திருகோணமலை ஒன்றிணைந்த வெகுஜன இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் சூரிய மின்கல உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் இல்லத்தில் இன்று (23) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

அவர்கள் தொடர்ந்தும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,

”நாட்டின் தேசிய சொத்துக்கள் அனைத்தும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற சர்வாதிகார நாடுகளிடம் அடமானம் வைத்து அபிவிருத்தி என்ற போர்வையில் தமது ஆட்சியினை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அரசாங்கம் மும்முரமாகச் செயற்பட்டு வருகிறது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் தேசிய சொத்துக்களான கந்தளாய் சீனி தொழிற்சாலை இந்தியாவிற்கு வழங்கப்படுவதாகவும், சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதாகவும், திருகோணமலை இயற்கைத் துறைமுகம் விருத்தி செய்யும் நோக்கில் அதனையும் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் தமிழர்கள் செறிந்து வாழும் சம்பூர் பிரதேசத்தில் இந்திய நிதி உதவியுடன் சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அவ்வாறு சூரியமின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான நிலப்பரப்பு இவ்வாறான ஒரு ஒப்பந்தத்துடன் இந்திய நிறுவனத்திற்கு வழங்கத் தீர்மானித்துள்ளது என்பது இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில் இவ்வாறு நாட்டின் வடக்கு முதல் தெற்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரை அனைத்து தேசிய சொத்துகளும் சர்வாதிகார நாடுகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டு அந்த நாடுகளுக்கு அடிமைபோல் வாழும் சூழ்நிலை நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடாது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எமது தேசிய சொத்துக்களைப் பாதுகாக்க எம்முடன் இணையுமாறு திருகோணமலை ஒன்றிணைந்த வெகுஜன இயக்கம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.