புத்தாண்டுக்கு முன் வருகிறது நிவாரண பட்ஜெட்

138 0
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நிவாரண வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (23) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை உடனடியாக மீளாய்வு செய்து நிதியாண்டுக்கான புதிய குறை மதிப்பீட்டை மே மாதத்துக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தேவையற்ற செலவுத் திட்டங்கள் துண்டிக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்துக்குப் பதிலாக நிவாரண வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சரவை அனுமதி வழங்கினால் இவ்வாறான வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டுவரத் தயார் எனத் தெரிவித்தார்.

புதிய வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால், எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் அவர் மேலும் தெரிவித்தார்.