முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பராமரிப்பு பணிக்குச் சென்ற தமிழக தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

122 0

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பராமரிப்பு பணிக்குச் சென்ற தமிழக தொழிலாளர்களை கேரளா அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய மூவர் குழு உத்தரவின் பேரில் பெரியாறு அணைப்பகுதியில் கீறல் விழுந்த படிக்கட்டை சரிசெய்தல், உதிர்ந்த சுவரில் சிமெண்ட் பூசுதல், புதர்களை அகற்றுதல் ஆகிய பணிகள் கடந்த வாரம் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக கட்டுமான தொழிலாளர்கள் சிலர் தமிழக நீர்ப்பாசன துறை அதிகாரிகள் அணைப்பகுதிக்கு செல்ல முயன்றனர். அப்போது தேக்கடியில் உள்ள கேரள வனத்துறை சோதனை சாவடி ஊழியர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. வழக்கமாக நடக்கும் பணிதான் என்று தமிழக ஊழியர்கள் எடுத்துக் கூறியும் கேரள வனத்துறையினர் அதனை ஏற்கவில்லை.

இனிமேல் மராமத்துப் பணிக்கு ஆட்களை அழைத்துச் செல்வதாக இருந்தால் முன்னதாகவே கடிதம் தரவேண்டும். எந்த பணி செய்யப்படுகிறது என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றும், அந்த கடிதத்திற்கு கேரள நீர்வளத்துறையினர் மற்றும் போலீசார் அனுமதி கொடுத்த பின்னரே செல்ல முடியும் என்று தெரிவித்தனர்.

மேலும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இதனால் பணிக்குச் சென்றவர்கள் அணைப்பகுதிக்குள் செல்லாமலே திரும்பினர்.

கேரள அதிகாரிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 1 வாரத்திற்கு முன்பு தமிழக நீர்ப்பாசன துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர் குடியிருப்பு மராமத்து பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமான பொருட்களை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் அனுமதித்தனர்.

ஆனால் அணைப்பகுதிக்கு கேரளாவை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித அனுமதியும் இன்றி சென்று வருகின்றனர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிவுறையின் படியே தற்போது மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் அதனை செய்யவிடாமல் கேரள அதிகாரிகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.