சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கும் இ. தொ.கா

123 0

மலையக மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி கடந்த ஒருவருடகாலமாக அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு திருப்திகரமான தீர்வு கிடைக்கவில்லை. வெறுமனமே மலையகத்தில்அபிவிருத்தி பணிகள் மாத்திரம் போதுமானதாக அமையாது.

எனவே கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள போவதில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாடு தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகவும் உந்து சக்தியாகவும் உழைத்து வரும் தோட்ட தொழிலாளர்கள் இன்றைய நிலையிலும் வாழ்வாதாரத்தில் மிக பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் நலனுக்காகவே செயற்படுகின்ற ஒரு பாரிய அமைப்பாகும். இன்று நேற்றல்ல அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலந்தொட்டு பெருந்தோட்ட மக்களின் நலன்களிலும் அவர்களது அபிலாசைகளிலும் பூரணமாக செயற்பட்டு வந்துள்ளதுடன் அவர்களுடைய நலன்களிலும் துயரங்களிலும் பங்கெடுத்துள்ளது.

தோட்ட தொழிலாளர்களுடைய ஆயிரம் ரூபா சம்பள உயர்விலும், உதவி ஆசிரியர் நியமனங்களிலும் மலையகத்தின் சனத்தொகைக்கு ஏற்றவாறு பிரதேச செயலக விஸ்தரிப்பிலும் மக்களுக்கு ஒரு காத்திரமான தீர்வு இதுவரையிலும் எட்டப்படவில்லை.

ஆகவே தான் அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்த சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பங்கேற்க மாட்டாது என்ற முடிவினை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும் கடந்த ஒரு வருட காலமாக அரசுக்கு முன் வைத்த குறித்த விடயங்களில் திருப்திகரமானதாகவும், முன்னேற்றகரமானதாகவும் ஒரு செயற்பாடு மக்களுக்கு கிடைக்காத காரணத்தினாலும் வெறுமனே மலையத்தில் அபிவிருத்தி பணிகள் மாத்திரம் போதுமானதாக அமையாது.

எனவேதான் நாம் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரையில் இன்று நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்வது இல்லை என கட்சி உயர்பீடம் தீர்மானித்திருப்பதாக அதன் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.